Translate

மகிழ்ச்சியாக இருக்க.

ஏழாவது அறிவு.


எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் இருக்கின்றன. ஆனால், அதை எப்படி அடைவது என்பது மட்டும்தான் பிடிபடாமல் இருக்கிறது. தவறான கதவுகளை தட்டியும், செல்லாப் பாதைகளில் பயணம் செய்தும் வாழ்வை தொலைத்து விடுகிறார்கள். இறுதி நாட்களில் இழந்தவற்றை எண்ணி வருத்தமும் இறுக்கமும் அடைகிறார்கள். எதற்காக படிக்கிறோம் என்பது தெரியாமல் படித்தும் எதற்காகப் பயணிக்கிறோம் என புரியாமல் பதவி வகித்தும், எதற்காக வாழ்கிறோம் என அறியாமல் வாழ்ந்தும் மரணத்தின் மடியில் மாண்டு போகிறார்கள்.

வாழ்வின் நோக்கத்தை புரிந்துக் கொள்வதே ஆறாவது அறிவு. அதை அப்படியே செம்மையாக செயல்படுத்துவதே ஏழாவது அறிவு.
வாசிக்க வேண்டிய சம்பவம் ஒன்று......

தத்துவப் பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார். ஒரு காலியான பெரிய ஜாடியை எடுத்து மேசை மீது வைத்தார். பிறகு இரண்டு அங்குலம் அளவு கொண்ட கற்களை அதன் உள்ளே போட்டார். ஜாடி நிரம்பியதும் மாணவர்களிடம் அதை காட்டி "இந்த ஜாடி எப்படி உள்ளது? " என்று கேட்டார்.

"நிரம்பிவிட்டது" என்று மாணவர்கள் பதிலளித்தார்கள்.

பிறகு அவர் கூழாங்கற்கள் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார். அரை சென்டிமீட்டருக்கும் குறைவாக இருந்த கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஜாடியில் போட்டார். ஏற்கனவே போடப்பட்டிருந்த கற்களின் இடுக்குகளில் அவற்றுக்கு இடம் கிடைத்தன. இனி ஒரு கூழாங்கல்லை கூட போட முடியாத அளவு ஜாடி நிரம்பி இருந்தது.

"இப்போது இந்த ஜாடி நிரம்பி விட்டதா?" என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

"முழுவதுமாக நிரம்பிவிட்டது" என்பதாக மாணவர்கள் தலையசைத்தனர்.
ஆசிரியர் இன்னொரு பெட்டியை எடுத்து மேலே வைத்தார். அதில் முழுவதும் மணல் இருந்தது. அந்த மணலை ஜாடிக்குள் மெதுவாக போட ஆரம்பித்தார். எல்லா இடைவெளிகளிலும் சென்று ஜாடியின் அனைத்து இடுக்குகளிலும் மணல் நிறைந்தது.

"இப்போது ஜாடி எப்படியுள்ளது?".

"சிறிதுகூட இடமில்லாமல் நிர்மப்பிவிட்டது" - ஒருமித்த உரத்த குரல் மாணவர்களிடமிருந்து வெளிப்பட்டது.

பேராசிரியர் பேச ஆரம்பித்தார். இந்த ஜாடி உங்கள் வாழ்வை பிரதிபலிக்கிறது நான் முதலில் போட்ட பெரிய கற்கள் உங்கள் வாழ்வின் முக்கியமான அம்சங்களை முன்மொழிகின்றேன் அவள் தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியம் மனைவி குழந்தைகள் மற்ற எல்லாவற்றையும் இறந்தாலும் இவற்றை தக்க வைத்துக் கொண்டால் உங்கள் வாழ்வு நிறைவு பெற்றுவிடும் நான் அடுத்து போட்ட கூழாங்கற்கள் உங்கள் பணி வீடு கார் ஆகியவை மற்றவை எல்லாம் நான் ஜாடிக்குள் கொட்டிய மணலை போன்றவை மிகவும் சாதாரணமானவை.

நீங்கள் முதலில் ஜாடியை மணலால் நிரப்பி விட்டால் பிறகு அதில் கூழாங்கற்களும் கற்களுக்கும் இடமிருக்காது நீங்கள் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சின்ன இலக்குக்காக செலவழித்தால் பெரிய நோக்கங்களுக்கு இடம் இல்லாமலே போய்விடும் உங்கள் மகிழ்ச்சிக்கு முக்கியமானவற்றை மீது அதிக கவனமும் அக்கறையும் செலுத்துங்கள் குழந்தைகளோடு விளையாடுங்கள் மனைவியோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் உடல் நலத்துக்காக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் வீடு கட்டவும் வாங்கவும் பணிபுரியவும் அகன்ற வாய்ப்புகள் அகப்படும்.

தத்துவப் பேராசிரியர் கூறியது போலவே, நம்மில் பலர் சின்ன இலக்குகளில் சக்தியை அழித்து விடுவதால் சிறகடிக்க முடியாமல் போய்விடுகிறது மணலால் நிரப்பி கொள்பவர்களுக்கு வைரங்கள் வரும்போது அறையில் இடமில்லாமல் போய்விடுகிறது ஏற்கனவே கைகளில் இருக்கும் கூழாங்கற்களை போடாவிட்டால் மரகதக் கற்களை வாரி எடுக்க முடியாது.

மகிழ்ச்சி வருவது விகிதாசார வாழ்வில்தான். அழகு என்பதும் விகிதத்தைப் பொறுத்து; ஆனந்தம் என்பதும் விகிதத்தை பொருத்தது. அருவி என்றாலும் அளவுக்கு அதிகமாக குளித்தால் சந்தோஷம் கிடைக்காது; ஜலதோஷம் தான் பிடிக்கும். எவற்றுக்கு எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதே நம் திருப்தியை தீர்மானிக்கும் திக்கு. சுற்றுலா செல்லும் மாணவர்கள் சிலர் முதன்முறையாக கடலை பார்க்கும் போது, அதில் கால்களை நனைக்கும் ஆர்வத்தில் எதுவரை ஆழம் என்பது தெரியாமல் சென்று உயிரிழப்பது உண்டு. தேனைச் சுவைக்க ஆசைப்பட்டு, அந்த தேனுக்குள்ளேயே குதித்து உயிரிழக்கும் எறும்புகள் போல.

பணியை எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் எனத் தெரியாமல், பணிக்கு அடிமையாகி விடுபவர்கள் உண்டு. பணியும், செயல்பாடுமே போதைகளாகிவிடுகின்றன. எந்த போதையும் ஆபத்தானது; அது எதுவாக இருந்தாலும் சரி, பதவியாக இருந்தாலும் சரி. ஏனேன்றால், அது புலன்களை மந்தமாக்கிவிடும் சக்தி வாய்ந்தது.

நாற்காலியே முக்கியம் என்றும், மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரமே பதக்கம் என்றும், பரிசு பெறும் புகைப்படங்களே ஆதர்சம் என்றும் வாழும் பலர், ஓய்வு பெறும்போது தங்களுக்குத் தாங்களே பச்சாதாபப்பட்டு கொள்வதை பார்க்க முடியும். 'இதற்காகவா வாழ்க்கையில் எத்தனையோ இனிய நிகழ்வுகளை நாம் இழந்தோம்' என அவர்கள் அங்கலாய்த்துக் கொள்வதைக் காணலாம். சாதனைகள் செய்யும் நோக்கில் அப்பாவின் பிறந்தநாளை, பெற்றோர்களின் திருமண நாளை, குழந்தைகளின் தேர்வு தேதியை மறந்த இவர்கள், தங்கள் இல்லத்திலேயே கருணை இல்ல உறுப்பினராக காலம் தள்ளுவார்கள்.

சிலர், அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓராண்டுக்குள் மாரடைப்பில் மாண்டு போவதை காணலாம். 'நமக்கு பணி ஓய்வே கிடையாது' என்று அவர்கள் நினைத்துக் கொள்வது தான் இதற்கு காரணம். அவர்கள் கூழாங்கற்களால் வாழ்வை நிரப்பி, அவை காலியானதும் வெறுமையால் தவிக்கும் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

பணியையே தம்முடைய அடையாளமாக்கி, பெயரை உதருபவர்களும் உண்டு. அதனால் கட்டாயத்தின் பெயரில் விடுப்பு எடுக்கும்போது கூட துடுப்பு இழந்த படகாக துடிப்பவர்கள் இவர்கள்.

பணி அவசியமானதுதான். ஆனால் அதற்கென்று விகிதாச்சாரம் உண்டு. நிறைய நேரம் செலவு செய்வதாலேயே அது நிறைவான பணி என்று கூறிவிட முடியாது. அடர்த்தியும், ஈடுபாடும், மதிநுட்பமும் தான் தீர்மானிக்கின்றன. பணியே பரிசாக மாறும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வாழ்வின் ஒட்டுமொத்த பரிமாணத்தை முழுவதுமாக மாற்றிவிடுகிறது. மற்றவர்களுக்காக அல்லாமல் நமக்காக அதைச் செய்யும் போதுதான் அது கூழாங்கல்லாவாவது இருக்கும். இல்லாவிட்டால் அதுவும் மணல்தான்.

எல்லாவற்றுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்குமா? பல் துலக்குவதற்கு யாராவது பரிசு தருவார்கள் என்றா அதைச் செம்மையாக செய்கிறோம்?. குளிப்பதற்கு யாராவது மதிப்பெண் போடுவார்கள் என்றா தூய்மையாகக் குளிக்கிறோம்? அதைப்போலத்தான் பணியும்.

வீடு கட்டுவதற்காக எல்லா இன்பங்களையும் அடகு வைக்கும் மனிதர்களைப் பார்க்கலாம். வீடு கட்டி முடியும் போது, அதை அனுபவிக்ககூட அவர்களுக்கு தெம்பு இருப்பதில்லை. பலர் தன் காரில் கீறல் விழுந்தால் எலும்பில் விரிசல் வந்ததுபோல் விசனப்படுவது உண்டு.

சோமர்செட் மாம் என்பவர், 'நான் புத்தகங்கள் எழுதியதற்குப் பதிலாக, என் குழந்தைகளுடன் இன்னும் சிறிது நேரம் விளையாடியிருக்கலாம்' என்று வாழ்நாளின் இறுதியில் வருத்தப்பட்டார். நம்மைச் சுற்றி இருக்கும் இனிமையான நிகழ்வுகளை தவற விட்டுவிட்டு, அற்பத்தனமானவற்றால் நம்மை நிரப்பிக் கொண்டால் மகிழ்ச்சி ஒருபோதும் விளையாது.

சமச்சீர் உணவு போலவே, சமச்சீர் வாழ்வும் முக்கியம். அறுசுவையில் கசப்பும் ஒரு சுவை என்பது போல, கசப்பான அனுபவங்களுக்கு அடியிலும் ஒளிந்திருக்கும் இன்பத்தை உணர்பவர்களை துன்பம் ஒருபோதும் தொடர்வதில்லை.

- வெ .இறையன்பு.

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS