Translate

Friday, July 24, 2020

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை பறிக்க நினைப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

anbumani ramadoss: Latest News, Videos and anbumani ramadoss ...

மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், ‘மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கும், மத்திய அரசின் முடிவை ஏற்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்ததற்கும் பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து மத்திய சமூக நீதித் துறையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நடத்திய ஆலோசனையில், கிரிமீலேயரை கணக்கிடுவதில் பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயுடன், சம்பளத்தை முழுமையாக சேர்ப்பதற்கு பதிலாக, வருமானவரிக்கு உட்படுத்தப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளலாம் என்றும் கிரீமிலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதற்காக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பது போலத் தோன்றினாலும், புதிய திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது என்பதே உண்மை.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அறிவித்த புதிய வருமானவரி முறையின்படி, நிரந்தரக் கழிவு ரூ.2.50 லட்சம் தவிர வேறு எந்த வரி விலக்கும், கழிவுகளையும் கோர முடியாது. அத்தகைய சூழலில் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், சம்பளத்தை மட்டுமே ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டவர்களின் மொத்த சம்பளத்துக்கும், நிகர வருமானத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கூடுதலாக பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும் குடும்பங்களாக இருந்தால், அவர்களால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. புதிய திட்டமும் சமூக அநீதியாகவே அமையும்.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, கிரீமிலேயர் வரம்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பறிக்க மத்திய அரசு துடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் சம்பளமும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்பட்டது தான் பிரச்சினையில் தொடக்கம் ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட நிலையில், பொதுத்துறை, தனியார்துறை பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொள்ளப்பட்டது 1993-ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு எதிரானது என்பதால், அந்த முறையை கைவிடும்படி சொல்வது தான் சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிடுவது 1993-ஆம் ஆண்டின் குறிப்பாணைக்கு எதிரானது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போது தான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள்ளாகவே பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி, சமூகநீதி மரம் முழுமையாக வளர்வதற்கு முன்பாகவே அதை வெட்டி வீழ்த்த பலர் முயல்வதும், மத்திய அரசின் முடிவுகள் அதற்கு சாதகமாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

கடினமான நிபந்தனைகளை விதித்து, பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் கிரீமிலேயராக அறிவித்து விட்டு, அவர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து, பொதுப்பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது தான் சிலரது விருப்பம் ஆகும். இதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்கு பெரும் தடையாக உள்ள கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாவிட்டால், சம்பளத்தை சேர்க்காமல், கிரீமிலேயர் வரம்பை இப்போதுள்ள 8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS