Translate

Saturday, July 25, 2020

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்





திருப்பத்தூர்.
பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமாள் கோவில் அருகில் உள்ள குளத்தை புலிகுட்டை ஊரைச் சார்ந்தவர்கள் தலைமையில்  குலத்தை தூய்மை செய்தனர். 
மேலும் கோயில் அருகில் 150 செடிகள்  வேம்பு,  புங்கை, ஆலமரம், அரசமரம், பூவரசன் போன்ற பல வகை செடிகளை பசுமை தாய்நாடு உறுப்பினர்கள் மற்றும் புலிக்குட்டியை சார்ந்த இளைஞர்கள் சேர்ந்து செடிகளை நட்டனர். 

கிருஷ்ணமூர்த்தி 
செய்தியாளர் 
மக்கள் சந்திப்பு நாளிதழ் 
9442416077

Friday, July 24, 2020

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை பறிக்க நினைப்பவர்களுக்கு துணைபோகவேண்டாம் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

anbumani ramadoss: Latest News, Videos and anbumani ramadoss ...

மத்திய அரசு பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கிரிமிலேயர் முறையில் மத்திய அரசு கொண்டுவரும் புதிய திருத்தம் குறித்து பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், ‘மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயரை தீர்மானிக்க மொத்த சம்பளமும் சேர்க்கப்படும் என்ற முந்தைய திட்டம் கைவிடப்பட்டு, வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் சேர்க்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், சமூகநீதியைக் காக்க அது உதவாது என்பதால் புதிய திட்டத்தையும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக 1993-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்’ என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம், வேளாண் வருமானம் ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கும், மத்திய அரசின் முடிவை ஏற்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தீர்மானித்ததற்கும் பா.ம.க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து மத்திய சமூக நீதித் துறையும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நடத்திய ஆலோசனையில், கிரிமீலேயரை கணக்கிடுவதில் பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயுடன், சம்பளத்தை முழுமையாக சேர்ப்பதற்கு பதிலாக, வருமானவரிக்கு உட்படுத்தப்படும் நிகர வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளலாம் என்றும் கிரீமிலேயர் வரம்பை ஆண்டுக்கு ரூ.12 லட்சமாக உயர்த்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற்படுத்தப்பட்டோர் நலனைக் காப்பதற்காக மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை தளர்த்தியிருப்பது போலத் தோன்றினாலும், புதிய திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது என்பதே உண்மை.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அறிவித்த புதிய வருமானவரி முறையின்படி, நிரந்தரக் கழிவு ரூ.2.50 லட்சம் தவிர வேறு எந்த வரி விலக்கும், கழிவுகளையும் கோர முடியாது. அத்தகைய சூழலில் அரசு அல்லது பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், சம்பளத்தை மட்டுமே ஒரே வருவாய் ஆதாரமாகக் கொண்டவர்களின் மொத்த சம்பளத்துக்கும், நிகர வருமானத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. கூடுதலாக பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் கிடைக்கும் குடும்பங்களாக இருந்தால், அவர்களால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது. புதிய திட்டமும் சமூக அநீதியாகவே அமையும்.

நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, கிரீமிலேயர் வரம்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பறிக்க மத்திய அரசு துடிப்பது ஏன்? என்பது தான் தெரியவில்லை. பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரின் சம்பளமும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்பட்டது தான் பிரச்சினையில் தொடக்கம் ஆகும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று நீதிமன்றங்கள் ஆணையிட்ட நிலையில், பொதுத்துறை, தனியார்துறை பணியாளர்களின் சம்பளம் கணக்கில் கொள்ளப்பட்டது 1993-ஆண்டின் அலுவலக குறிப்பாணைக்கு எதிரானது என்பதால், அந்த முறையை கைவிடும்படி சொல்வது தான் சரியான தீர்வாக இருக்கும். அதைவிடுத்து, அரசு பணியாளர்களின் சம்பளத்தையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று ஆணையிடுவது 1993-ஆம் ஆண்டின் குறிப்பாணைக்கு எதிரானது.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இப்போது தான் முதல் தலைமுறையினர் மத்திய அரசு வேலை மற்றும் உயர்கல்வியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்குள்ளாகவே பல்வேறு தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி, சமூகநீதி மரம் முழுமையாக வளர்வதற்கு முன்பாகவே அதை வெட்டி வீழ்த்த பலர் முயல்வதும், மத்திய அரசின் முடிவுகள் அதற்கு சாதகமாக இருப்பதும் வேதனையளிக்கிறது.

கடினமான நிபந்தனைகளை விதித்து, பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் கிரீமிலேயராக அறிவித்து விட்டு, அவர்களிடமிருந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து, பொதுப்பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்பது தான் சிலரது விருப்பம் ஆகும். இதற்கு மத்திய அரசு எந்த வகையிலும் துணை போகக்கூடாது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முழுமையாக அவர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்கு பெரும் தடையாக உள்ள கிரீமிலேயர் முறையை நீக்க வேண்டும். அது உடனடியாக சாத்தியப்படாவிட்டால், சம்பளத்தை சேர்க்காமல், கிரீமிலேயர் வரம்பை இப்போதுள்ள 8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த அரசு முன்வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பி


சேலம் : ஐ.ஏ.எஸ் படிக்க விருப்பம் தெரிவித்த மலைவாழ் மாணவியின் 2 ஆண்டுகளுக்கான கல்விச்செலவை சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏற்றுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்துள்ளது கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம். இதில் 33 மலைவாழ் குக்கிராமங்களை கொண்ட பாலமலை பஞ்சாயத்து உள்ளது. இம்மலை கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிகளுக்கு சாலை வசதி மற்றும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு ராமன் பட்டி என்ற மலை கிராமத்தில் உள்ள உண்டு உறைவிட உயர் நிலைப்பள்ளியில் 140 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகர் நேற்று முன் தினம் மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

IAS ஆக வேண்டும் என விருப்பத்தை வெளிப்படுத்திய மலைவாழ் மாணவியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட சேலம் எஸ்.பிஅப்போது அங்கு 10-ம் வகுப்பு முடித்த மாணவி ஜெயந்தி (16) எஸ்.பி.,யை சந்தித்து தனது ஐ.ஏ.எஸ் படிக்கும் தனது ஆசையை தெரிவித்தார். இதனையடுத்து மாணவியை தனது சேலம் அலுவலகத்திற்கு அழைத்து, அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகங்கள் வழங்கி 2 ஆண்டுகள் கல்வி செலவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மாணவிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஒரே நாளில் 49,310 பேருக்கு பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில பரவி வருகிறது. கடந்த இரு நாட்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் உயரிழப்பு எண்ணிகை பிரேசில் அமெரிக்கா நாடுகளை போல் உச்சமாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,209 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 740 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 9,895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 347,502 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6484 அதிகரித்துள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 194253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 12854 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்றுஒரே நாளில் 6472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 192964 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5210பேர் குணம் அடைந்தனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 136793 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52939 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3232 பேர் உயிரிழந்துள்ளனர்.

Thursday, July 23, 2020

சென்னையில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை:23
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 39 ஆயிரம் நெருங்குகிறது. அதாவது இன்று ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை போல் தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

Gold price tops record Rs 40,000 mark as recession fears deepen ...The Health Benefits of Wearing Silver Jewelry

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து நகைக் கடைக்காரர்கள் கூறுகையில் இந்த ஆபரணத் தங்கத்தின் விலை 40 ஆயிரத்தை எட்டும் என்றனர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனா இன்று ஒரு புதிய உச்சத்தை தொட்டதா ?

திருப்பத்தூர் - 23,
தமிழகம் முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6472 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1336 நபர்கள். 5210 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 88 நபர்கள் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 74 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 465 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 257 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 நபர்கள் தொற்றால் இறந்துள்ளனர்.
 
😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇  😇

மத்திய அரசின் நான்கு அவசர சட்டங்களும், விவசாயிகளின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் - வைகோ

மலராத மறுமலர்ச்சியும் வைகோவின் ...


சென்னை-.23
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த ஐந்து மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும். நாடாளுமன்றத்தில் விவாதித்து, மாநிலங்களின் கருத்துகளையும் அறிந்து வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவராமல், தானடித்த மூப்பாக மோடி அரசு செயல்படுவது, இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குழிதோண்டிப் புதைத்து, மாநில உரிமைகளை நசுக்கும் 'பேரரசு' மனப்பான்மை ஆகும்.

வேளாண் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, டெல்லியின் ஏகபோக ஒற்றை அதிகார ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் மேற்கண்ட நான்கு சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஏனெனில், விவசாயிகள் வேளாண் தொழிலுக்கு பெற்று வரும் இலவச மின்சார உரிமையை, மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 முற்றிலும் நிராகரிக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 திருத்தச் சட்டம் தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் சந்தையில் இவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமை பெருநிறுவனங்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மேலும் பதுக்கல்காரர்களால் விலையேற்றம் மக்களைப் பாதிக்கும்.

"ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை" என்பதை நிலைநாட்ட வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020 கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை இந்தியாவில் எங்கு கொண்டுபோய் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் என்று மத்திய அரசு கூறுவது ‘கேழ்வரகில் நெய் வடிகிறது' என்ற முதுமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. நடைமுறைச் சாத்தியமற்ற, விவசாயிகளுக்குப் பாதகமான இச்சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விவசாயிகளிடம் நேரடியாக அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை கொள்முதல் செய்வது மட்டுமின்றி, சந்தையை தங்கள் விருப்பப்படி பெருநிறுவனங்கள் ஆட்டிப் படைக்கும் நிலைதான் உருவாகும். தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக்குழுச் சட்டங்கள், வேளாண் கொள்முதலை இனிக் கட்டுப்படுத்த முடியாது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு, தனியார் கொள்முதல் நிலையங்கள் பெருகும்.

இது விவசாயிகளுக்குச் செய்யப்படும் பச்சைத் துரோகம் அல்லவா? விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு), விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் உற்பத்தியில் பெருவர்த்தக நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கிறது. இதனால் வேளாண் தொழிலை பெரு வணிகக் குழுமங்களிடம் பறிகொடுத்துவிட்டு, விவசாயிகள் நிலங்களை விட்டு வெளியேறி, சொந்த மண்ணிலேயே பஞ்சைப் பராரிகளாக அலையும் நிலையை உருவாக்கிவிடும். அந்த நிலைமை ஏற்பட வேண்டும் - வேளாண் நிலங்களைப் பறிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டமாகும்.

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள், விவசாயிகள் நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் செய்திருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க கழகக் கண்மணிகளும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட்டங்களில் நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Featured Post

குளத்தை தூய்மை செய்து செடிகளை நட்ட அறக்கட்டளை மற்றும் ஊர் மக்கள்

திருப்பத்தூர். பசுமை தாய்நாடு அறக்கட்டளை  சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஆதியூர்,    புலிக்குட்டை பகுதியில் நூறுவருட பழைமை வாய்ந்த  பெருமா...

POPULAR POSTS